இந்து கலா மன்றம் ஓர் அறிமுகம்

உலகின் கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மதம் இந்து மதம். சமய அறிவு நம் மக்களிடையே தெளிவின்றி சிதைந்து கொண்டிருக்கையில் தருமம் நலிவடைந்து அதர்மம் தலை தூக்கி நின்றாடும் இக் காலகட்டத்தில் வாழும் முறைகளில் நிறைவின்றி குறைகளே காணப்படுகின்றன. இதற்கான மூலகாரணம் நமது சமயத்தில் தெளிவான அறிவின்மையும் பற்றின்மையுமே ஒழுக்கமின்மையுமே காரணமாக அமைகின்றது.

இதையுணர்ந்த நல்லறிஞர்கள் அறநெறி உணர்த்தலையும் சமயப்பற்றையும் மக்களிடையே வளர்த்தெடுப்பதற்காக சமய ஸ்தாபனங்களையும் நிறுவினர். போதனைகள், பேருரைகள், கூட்டுப் பிரார்த்தனைகள் என்பவற்றை சிரமம் பார்க்காது திக்கெட்டும் செயற்படுத்த தொடங்கினர். சைவமும் தமிழும் தளைத்தோங்கும் திருப்பழுகாமம் எனும் புகழ் சேர் புண்ணிய பூமியில் வாழும் இந்து இளைஞர்கள் அப்பணிகளை சீரிய முறையில் செய்யத் தலைப்பட்டனர். எமது சமூகத்தினரிடையே நமது சமயத்தின் தெளிவினையும் பற்றையும் ஏற்படுத்த 1975 ஆம் ஆண்டு ஸ்ரீ சுவாமி அஜராத்மானந்த மகராஜ் அவர்களால் இந்து கலாமன்றம் என்ற புனித நாமம் சூட்டப்பட்டு 1988.04.15 ஆம் திகதி அம் மன்றத்தின் ஊடாக தனது செயற்பாட்டைத் தொடங்கியது. 1988.04.15 ஆம் திகதி இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக பதிவு செய்து தனது செயற்பாட்டை மேலும் அதிகரித்துக் கொண்டது.

இந்து கலாமன்றமானது புனித நாட்களிலும் உற்சவ காலங்களிலும் உள்ளூரிலும் பிற ஊர்களிலும் ஆலயங்களுக்குச் சென்று கூட்டுப் பிரார்த்தனை, நற்சிந்தனைகளைச் செய்து வந்தது. அப்பணி தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எமது மன்றத்தின் மூலம் பஜனைப் பாடல்கள், நவராத்திரி பாமாலை, கந்தசஷ்டி கவசம் போன்ற நூல்களும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதுமட்டுமன்றி எமது இந்து கலாமன்றமானது சமூகப் பணிகளையும் நிகழ்த்தி வந்துள்ளது.

அவ்வகையில் பிரயாணிகள் தங்குமடம் ஒன்றினை அமைத்துக் கொடுத்துள்ளது. அத்துடன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உதவிகள் பல புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்து கலாமன்றத்தின் திருப்பணி இத்துடன் நிறைவடையவில்லை. கல்வி கற்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் இளைஞர் யுவதிகளையும் சமய அறிவு மேலோங்கவும் சமய நற்பணியில் அவர்களை முழு மூச்சாக இயங்க வைக்கவும் நல்லெண்ணம் கொண்டு அறநெறிப் பாடசாலையை எமது ஊரின் பாடசாலைகளிலும், ஆலய முன்றலிலும் நடாத்தத் தொடங்கியது.
அறநெறிப் பாடசாலை மூலம் மாணவச் செல்வங்களுக்கு நல்லறிவினையும் சமயப் பற்றினையும் போதித்து வருகிறது. அதுமட்டுமின்றி இன்றைய நிலையில் அறநெறிப் பாடசாலை களுக்கிடையே இடம்பெறுகின்ற போட்டிகளிலும் எமது அறநெறிப் பாடசாலை சாதித்து வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். அவ்வகையில் 2015வ ஆண்டு தேசிய மட்டத்தில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் 2வது நிலையைப் பெற்று சாதனை படைத்தது. அது மட்டுமன்றி 2018 ஆம் ஆண்டு இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினால் சிறந்த அறநெறிப் பாடசாலைக்கான விருதையும் பெற்றது.
தற்போது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற வில்லுப் பாட்டுப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளது என்பது யாவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். இவ்வாறு பல விடயங்களை இந்து கலாமன்றம் முன்னெடுத்துச் செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பணிகளுடன் இந்து கலாமன்றம் ஆரம்பகாலம் தொட்டு பொங்கல் விழாவினை நிகழ்த்தி வருகின்றது. தற்போது வரை இந் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதுமட்டுமன்றி தனக்கான தனித்துவத் தினை நிலைநாட்ட 2007ஆம் ஆண்டு இந்து கலாமன்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், நன் கொடையாளர்கள், மன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 2019 ஆம் ஆண்டும் தனக்கான கட்டடத்தினை உருவாக்கிக் கொண்டது. ஆலய முன்றலிலும், பாடசாலைகளிலும் இடம்பெற்ற அறநெறிப் பாடசாலையானது தற்போது இக்கட்டடத்தினுள்ளே இடம்பெற்று வருகின்றது.
இப்பேற்பட்ட பாரிய தொண்டுகளையும் பெரிய நோக்கத்தோடு சமய அறிவு மிளிர பணியாற்றி வரும் இந்து கலாமன்றம் கூட்டுப் பிரார்த்தனைகளில் இசைக்கின்ற பாடல்கள் மங்கிப் போவதைக் கண்டு அப்பாடல்களையும் இந்து கலா மன்றத்தினால் உருவாக்கப்பட்ட பாடல்களையும் தொகுத்து 45 வது அகவையினை முன்னிட்டு 19.01.2020 ஆம் ஆண்டு “பஜனைப் பாடல்கள்” எனும் நூலை வெளியிட்டது. இந்நூலும் நன்னூலாய் அனைவருக்கும் பயன்படும்.

“இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்”

எமது மன்ற உறுப்பினர்கள்

தலைவர்

இ.தில க் ஷ ன்

உப தலைவர்

அ. ரேணுகாந்தன்

செயலாளர்

தெ. மேகாணன்

உப செயலாளர்

ஞா. தஷாரகன்

பொருளாளர்

சோ.மிகுரன்

உறுப்பினர்

த. இலட்சுமிகரன்

உறுப்பினர்

க.விவேந்தன்

உறுப்பினர்

தி.மிதுஜன்

உறுப்பினர்

ம.வனஜன்

உறுப்பினர்

சி.ரக்ஷியா

உறுப்பினர்

கு.திலக்சனா

உறுப்பினர்

பா.விதுர்சன்

உறுப்பினர்

ர.போசகன்